Friday, August 5, 2011

தேவதன் :)


பெண்கள் தேவதைகளாக வருணிக்கப் படுகிறனர்..
உன்னை என்னவென சொல்வது?
சரி! வித்தியாசத்திற்கு
உனை பெற்ற அம்மா தேவதையாகட்டுமே!

புன்னகை


மரணத்தை கொல்ல வேண்டுமா,
ஒரு முறை புன்னகை செய்..
மரணம் கெஞ்சும் வாழ்வதற்கு!

தெரியும்..

உன் பார்வைக்குள் வசியம் வைத்திருக்கிறாயடா!!
எப்படித் தெரியுமா?
பிறகு எப்படி எப்போதும் எனக்கு நீயே தெரிகிறாய்?

--நிலாப்பெண்..

காதல்..


நீ ஆறுதல் கூறுவதானால்,
இன்னும் ஆயிரம் முறை சண்டையிடலாம்...

--நிலாப்பெண்..

Wednesday, July 27, 2011

இலையுதிர் காலத்தில் அரும்பிய மலர்- காதல்!


காதலித்த பின் இருக்கும் ஒரே “வலி”, காதலை காதலிக்காமல் இருப்பது.

முதன் முறையாய் அவன் காதல் சொன்ன இடத்திற்கு எந்த இலக்கும் இல்லாமல் சென்றாள். அவர்கள் அமர்ந்த அந்த மரத்தின் கீழ் அமர்ந்தாள். இது இலையுதிர் காலம், மரத்திற்கு மட்டுமல்ல அவளுக்கும் தான்.

மரத்தில் சாய்ந்து கண் மூடினாள், கையற்ற மரம் அவளை அணைத்து ஆறுதல் கூறுவது போல் உணர்ந்தாள். கண் திறந்து பார்க்கையில், மூடிய கண்களுக்குள் நுழைந்திருந்த கண்ணீர் துளிகள் உதிர்ந்து விழுந்தன புற்களின் தலை மேல்.

அவன் காதலைச் சொன்னப்போது மறுத்த முதல் மூன்று நாட்கள் நினைவில் இன்று நிழலாடின, அப்படியே மறுத்திருந்தால், இன்று மறக்க முடியாமல் மருங்க மாட்டேனே என.

செல்லிடைப்பேசியை அவ்வப்போது பார்த்தாள், சிணுங்கி அழைக்காதோ என.

எத்தனை, செல்லம் கொஞ்சியுள்ளோம் இச்செல்லிடை வழியே. உயிருடன் இருந்தும் செத்து விட்டதோ செல்லிடை என சோதித்தாள், அவள் காதல் உயிர்ப் பெற வழியுண்டோ என.

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை, அவள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தாள், எதுகை மோனையற்ற எம் காதல் கவிதைகள் என.

இன்று எல்லாம் ஒருசேர மெளனித்திருந்தன

காதல் செய்தால், வலி தான் என்று அவள் தோழி சொன்னது உண்மை என தோன்றியது.

மூன்று வருடக் காதல், முக்கால் மணி நேர சண்டையில் முற்றுப் பெற்றதா?

மூச்சு முட்டியது அவளுக்கு.

சின்ன சின்ன ஊடல்கள் எப்போதும் உண்டு அவர்களுக்குள். அதுவும் காதலின் அடையாளம் தானே. ஆனால் சில நாட்களாய், ஊடல் பெருத்து சாடல்களாகின.

“உன்னால் தான் எல்லாம்” என இருவரும் இருவரின் மேல் புகார் கொடுத்துக் கொண்டனர். இன்று சரியாகும், நாளை சரியாகும் என நம்பிய இருவரும் என்றுமே சரியாகாது, என முடிவெடுத்து முடித்தனர், அவர்களின் காதல் அத்தியாயத்தை.

சூரியன் மறைந்து வெண்ணிலா வெளி வரும் நேரம். அவளிடம் கண்ணீரேக் கெஞ்சியது நாளை வருகிறேனே என. எழ எத்தனித்தப்போது பெரிய கிளையொன்று மரத்தை பிரிந்து மண்ணைத் தொட்டது. சத்தம் கேட்டு திரும்பினாள், அவனும் திரும்பினான் மரத்தின் மறுப்பக்கத்தில் இருந்து.

இதழ்கள் விரிந்தன, வார்த்தைகள் மட்டும் பின்னிதழில் சிக்கிக் கொண்டன இருவருக்கும்.

இது தான் சமயம் என, கண்கள் பேசத்துவங்கின.

முடிந்த காதல் அத்தியாயத்தை, மரக்கிளையை அர்ப்பனித்து சேர்த்த மரம், இலையில்லாமல் இன்னும் அழகாய் தெரிந்தது!!!

Sunday, June 19, 2011

குருவிக்குஞ்சு

வாடகை கொடுக்காத

சிட்டுக்குருவிகள் கூடு கட்டியப் பின்

இன்னும் ஒரு சொந்தம் கூடியது

என் அறைக்குள்,

எனக்கும் :)

--நிலாப்பெண்..

Thursday, May 12, 2011

காதல் வலை

காதல் உலகில் காலடி வைக்கையில்,

காற்று காதில் மெதுவாய் வருட

குயில்கள் கூட்டம் கானம் பாட

மரம் அசைந்து பூக்கள் தூவ

நிலவு ஒளியை இன்னும் கூட்ட

மழைத்துளி மண்ணில் எங்கும் படர

முகம் முழுக்க பூரிப்புடன்

கண்கள் சிரிக்கக் கனவுக் கொண்டு

மழலையாக துள்ளி மகிழ்ந்து

காதல் கோட்டைக்குள் வேகமாய் நுழைந்து

ஓடியாடி சில தூரம் கடக்கையில்,

காற்று புயலாய் மாறி கர்ஜிக்க

கிளைகள் ஆடி குயில்கள் பறக்க

வெள்ளம் பாய்ந்து பாதை மறைக்க

இருளின் ராஜ்ஜியம் எங்கும் விரிய

கண்கள் மூடி வெளிச்சம் தேட

வலையில் சிக்கிய கால்கள் நடுங்க

உணர்ந்தேன் பலியான கனவுகளை

கேட்டேன் காதலின் அரக்கச் சிரிப்பை..

--நிலாப்பெண் “புவனா”

Saturday, February 5, 2011

மடி..

கன்னியாய் இருப்பதை விட,
கணினியாய் இருந்திருக்கலாம்!
தேவை உன் மடி..

--நிலாப்பெண்..

பார்வை போதும்

என் கவிதைகளை
வார்த்தைகளால்
அலங்கரிப்பதில்லை..
உன் பார்வை போதும்,
அழகான கவிதையாய்
உருமாறி நிற்கிறது......

--நிலாப்பெண்..

என்னவனாய்...

அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண்..

Friday, November 12, 2010

ஐயகோ!!!




கருணாநிதியின்
கண்ணாடி பிளக்கப்பட்டு..
ஜெயலலிதாவின்
மூக்கு உடைக்கப்பட்டு..
ராஜபக்ஷேவின்
உடல் துண்டாக்கப்பட்டு..
சோனியா காந்தியின்
கைகள் வெட்டப்பட்டு..
மன்மோகன் சிங்கின்
தலைப்பாய் உருவப்பட்டு..
அத்வானியின்
ஆடை கசக்கப்பட்டு..
ரஜினியின்
முழங்கால் மடிக்கப்பட்டு..
ஸ்னேகாவின்
உதடு கிழிக்கப்பட்டு..
இன்னும் இன்னும்
பல பிரபலங்கள்...

மளிகை சாமான் கடையின்

பொட்டலங்களில்!!!

--நிலாப்பெண்..

Wednesday, September 1, 2010

வாழ்க்கையுடன் போராடு..


உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,
வலியென வீழ்ந்துவிடாதே!
விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு....

தனிமை சிறையில் அகப்பட்டு கொண்டால்
இருட்டுக்குள் அடங்கிவிடாதே!
பிறர் வாழ்க்கைக்கு ஒளியேற்ற ஓடு...

வாழ்க்கை பாதையில் தடங்கல்கள் தடுத்தால்
தடுமாறி தளராதே!
விண்ணை தொடுவது போல் எகிறி தாண்டு..

தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால்
அடங்கி விடாதே!
நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..

விதியென மூலையில் மூளையில்லாது
மழுங்கி விடாதே!
மதிக் கொண்டு வெல்வதை உலகிற்கு இயம்பு..

கூனிக் குறுகி கேள்விக்குறியாய் வாழ்ந்து
மாய்ந்து விடாதே!
நிமிர்ந்து நின்று ஆச்சரியக் குறியாக உயர்..

--நிலாப்பெண்..

Monday, August 30, 2010

வீரா!

வளைந்து குறுகினாலும்,
வீரத்தின் அடையாளம்.
உன் முறுக்கு மீசை!

மென்மை!

இருப்பக்க அரிவாள்
மென்மையாய் தீண்டுதே,
மீசைக்காரா!

--நிலாப்பெண் ..

வண்ணங்கள் விற்பனைக்கு..


நீலமும் சிவப்பும் ஒன்றாக,
வானமும் வட்டனும் அல்ல..
கருப்பும் வெள்ளையும் கட்டிக்கொண்டு,
ரஜினியும் ஸ்ரேயாவும் அல்ல..
மஞ்சளும் பச்சையும் பக்கத்திலேயே,
கட்சிக் கூட்டமும் அல்ல..
காவியும் சாம்பலும் பக்கத்திலேயே,
காஞ்சிபுர மடமும் அல்ல..


விதவை விற்கும் பாசிமணிகள்..
வெறும் பத்து ரூபாய்!

--நிலாப்பெண்..
==>வட்டன் -- சூரியனுக்கு நான் சூட்டிய செல்ல பெயர்..

கனவுக்குள்ளே..


நேற்று நீ கனவில்
வருவதாய் சொன்னாய்..
நானும் கண்விழித்து
காத்திருந்தேன்..
உன் நினைவுகளின்
ஊடே கனவுக்குள்ளும்
கள்ளத்தனமாய்
எப்படி புகுவாயென?
ஆனாலும் வந்து தான்
விட்டாய்..
தற்செயலாய்
கண் சிமிட்டுகையில்,
தொட்டில் கட்டி,
எனை தாலாட்ட...


--நிலாப்பெண்..

தூக்கமின்மை..

ஏனோ என் இரவுகள்,
இப்பொழுதெல்லாம்
முடிவதே இல்லை..
பொழுது புலர்ந்த பின்னும்
பெரிதாய் மாற்றம்
உணர்வதில்லை..
இயற்கை வரைந்து விட்ட
கண் மையாய்,
கருவளையம்
கவிழ்ந்து நிற்க...
கனவுகளின் ஊடே
வரும் தூக்கத்தை
துரத்திக் கொண்டு நான்..

காரணம்?
கரண்ட் இல்லா
கோடைக் காலம் மட்டுமல்ல,
தற்போது தேர்வுக்காலம் கூட

--நிலாப்பெண்..

காதலினால்..


உன் பெயரின் அர்த்தம் கேட்டேன்,
தெரியாது "புவி' என்றாய்..
என் பெயர் அர்த்தம் பெற்றது!!!

--நிலாப்பெண்@ புவி:)

அழகான வார்த்தைகள்..


உன்னை பற்றி
கவிதை எழுதுகையில்,
நான் திரும்ப திரும்ப
திருத்துவதே இல்லை..
வார்த்தைகள் எல்லாம்
இடம் தேடி அமர்கிறது
உன்னை பற்றிய
கவிதை என்றதும்!

--நிலாப்பெண்..

வாழ்கையாம் வாழ்க்கை!!!


வேதனை தலைத்தூக்கும் நேரம்,
தலைக்குனியும் தன்னம்பிக்கை..

சுடும் வார்த்தைகளின் முன்,
சுடுகாட்டில் சுயமரியாதை..

கண்ணீரின் வரவறிந்து,
சென்றுவிடும் சிரிப்பலை..

மரியாதை மிதிப்படுகையில்,
மறைந்துவிடும் மனிதநேயம்..

இழப்புகள் இறுதிவரை தொடர,
வரவுகள் மட்டும் வக்கனாய்..

வாழ்க்கையாம் வாழ்க்கை!
மனிதராம் மனிதர்!!

--நிலாப்பெண்..