Friday, May 18, 2018

உயிர் பிரியா இறப்பு!


வேண்டுமென்றே
மீண்டும் மீண்டும்
தொலைக்கிறேன்
என் அடையாளத்தை,
உயிர் பிரியா இறப்பு!
நிலாப்பெண்..

மாமழை மறைத்தது!

மெதுவாய் நகரும்
மேகத்தின் ஊடே
உன் முகம் வரைந்து
ரசித்த நேரம்;
மழைத்துளி துளிர்த்து
ஓவியம் கரைய,
வெடித்த கண்ணீரை
மாமழை மறைத்தது!
--நிலாப்பெண்..

நகர மறுக்கிறது!


விரல் ஒட்டிய
கோல மாவாய்
காதலில் கரைந்த
நாட்கள்,
மனதில் ஒட்டி
நகர மறுக்கிறது,
எத்தனை முறை
உதறினாலும்!
நிலாப்பெண்..

எதற்கு கவிதை??


திருமணத்திற்கு பின் ஏன் கவிதை எழுதுவதில்லை??
கவிதையே சொந்தமான பின்
இன்னும் எதற்கு கவிதை??
--நிலாப்பெண்..

சிலிர்க்க வைக்கிறதே!

மொட்டை மாடியில்
உலரும் துணிகளை
எடுக்கையில்
வீணை இசையாய்
மனதை மீட்டுகிறது,
மங்கிய மழை நேரம்
நாம் கண்களால்
கவிதை வரைந்த
நொடிகளை!
கன்னம் மறைத்த
கூந்தலை ஒதுக்கிய
உன் விரல்களை,
சாலைக் கடக்கையில்
குளிர்ந்த காற்றின்
வருடல்கள்
நினைவூட்டுகிறது
நிதானமாய்!
கல்லெறிந்து தெறித்த
நீர்த்துளிகள்
தொட்டும் தொடாமலும்
படுவது போல்,
காதல் மணித்துளிகள்
சீண்டிவிட்டு
சிலிர்க்க
வைக்கிறதே!
--நிலாப்பெண்


நமைத் தேடி!


கரடு முரடான
காட்டு பாதையில்
துள்ளி ஓடும்
மானாய்
நம் காதல்!
கல் தடுக்கி
விழுமோ
கால் தடுக்கி
விழுமோ என்ற
பதைபதைப்பு!
அந்த வஞ்சப் புலியிடம்
அகப்படுமோ?
புதைக்குழியில்
புதைந்து விடுமோ
என்ற பரிதவிப்பு!
நாம் கைக்கோர்த்து
கண்ணீர் கரைந்து
காதல் தேடுகையில்
புது மழலையாய்
அந்த மான்
நம் மடியில்
நமைத் தேடி!

--நிலாப்பெண்


நிலவா!


என் வாழ்வை இத்தனை அழகாய்
செதுக்கிய சிற்பி நீ!
என் உலகை வண்ணமயமாய்
வரைந்த ஓவியன் நீ!
கருவில் வந்து தாய்மை
உணர்வை தந்த கடவுள் நீ!
எனக்காக உனை சுமந்து
உன்னால் உயிர் சுமந்தேன்!
நீ பிறந்த இத்தினம்
நான் மறுமுறை பிறந்த தினம்!
கவிதையாய்
காதலாய்
உன் மழலைக்குள் நான்,
முதல் முறை மழை கண்ட மழலையாக!
நிலவா! ஒளியை மட்டும் காண்கிறேன்
உன்னால்!

--
நிலாப்பெண்