அடிக்கடி முறைத்துப் பார்ப்பாய்
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை
நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள்
விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல்
அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.
ஏய்! திருட்டு பூனையே
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..