Thursday, March 11, 2010

நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..


செல்லும் பாதையில்,
நாணயம் ஜொலிஜொலிக்க..
கண்டும் காணாமல் நான்!
என் "நாணயதைக்" காப்பாற்றி..

அதே பாதையில்
கத்தையாய் நோட்டு,
சில்லறையாகிப் போனது
என் "நாணயம்"!!!

--நிலாப்பெண்..

அமாவாசை அறியாச் சிறுமி..


அமாவாசை அறியாச் சிறுமி..
நிலவுத் தொலைந்துவிட்டதா?
எப்படி தொலைந்திருக்கும்?
நேற்றுக் கூட பார்த்தேனே?
நல்லாத் தானே இருந்தது?
யாருடனாவது சண்டையோ?
தனிக்கட்டை யாரோடு சண்டையிடும்?
நட்சத்திரங்கள் வம்பிழுத்திருக்குமோ?
நாலாப்பக்கத்திலும் இல்லையே?
கீழக் குதித்துத் தற்கொலை பண்ணியிருக்குமோ?
நாளிதழில் செய்தி வருமோ?
நிலவுக்கு என்னாச்சோ?
யாருமே கவலைப்படலையே?
அம்மா அடுப்படிக்குள்ளேயே?
அப்பா அலுவலகத்திலேயே?
நிலவு கண்ணாமூச்சி காட்டுதோ?
நாளைக்கு வந்திருமோ?
காத்திருக்கிறேன்..

--நிலாப்பெண்..

இடமாற்றம்..


பசி வயிற்றை கிள்ளவில்லை,
பேருந்தில் இடையைக் கிள்ளியது..

கொடூரனின் காமப்பசி!

--நிலாப்பெண்..

போனப் பின் ஏது?


அவன் பையில் ஒரு ரூபாய்!
எல்லோருக்கும், அவன் செல்லாக் காசு..

பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய்,
அத்தோடு, செல்லும் காசு..


--நிலாப்பெண்..

நிறைவு..


என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....

--நிலாப்பெண்..

நான் யாரெனில்?


தினம் தினம் அவமானப்படுவேன்.
சுற்றத்தார் சுமத்தும் பழிகளை,
சுமைத் தாங்கியாய் சுமப்பேன்.
கணவன் கள்ளத்தொடர்பைக் கூட,
கண்ணியமாய் ஆதரிப்பேன்.
மாமியார் கொடுமைகளை
கண்ணீருடன் பெறுவேன்.
நாத்தனாரின் நடத்தையைக் கண்டு
உள்ளம் பொங்கி அழுவேன்.
குழந்தைகளுக்காகவே குமுறலுடன்
காலம் கழிப்பேன்.
ஒருநாள் வேறு வழியின்றி,
பொங்கி எழுவேன்.
வீட்டை விட்டு வெளியேறி,
கைநிறைய காசு பார்ப்பேன்.
கார், பங்களா எல்லாம்
கலர் கலராய் சொந்தமாக்குவேன்.
கணவனே வந்து காலடியில்
விழும்படி செய்வேன்.
நான் யாரெனில்,
பெண்களே கொஞ்சம் கண்ணீரை
துடைத்து விட்டு பாருங்கள்..
நானே,

"உம் சீரியல் நாயகி"!!!!!!!!!!!!

--BY சீரியல் பார்காத ""நிலாப்பெண்..."