Sunday, June 14, 2009

வாழ்க்கையுடன் போராடு..


உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,

வலியென வீழ்ந்துவிடாதே!

விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு....

தனிமை சிறையில் அகப்பட்டு கொண்டால்

இருட்டுக்குள் அடங்கிவிடாதே!

பிறர் வாழ்க்கைக்கு ஒளியேற்ற ஓடு...

வாழ்க்கை பாதையில் தடங்கல்கள்

தடுத்தால்தடுமாறி தளராதே!

விண்ணை தொடுவது போல் எகிறி தாண்டு..

தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால் அடங்கி விடாதே!

நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..

விதியென மூலையில் மூளையில்லாதுமழுங்கி விடாதே!

மதிக் கொண்டு வெல்வதை உலகிற்கு இயம்பு..

கூனிக் குறுகி கேள்விக்குறியாய் வாழ்ந்துமாய்ந்து விடாதே!

நிமிர்ந்து நின்று ஆச்சரியக் குறியாக உயர்..

--நிலாப்பெண்..

ஏய் தமிழனிமே!


இனிமேல் தண்ணீரை
தாராளமாகவேக் குடியுங்கள்..
உயிர் இழந்திருக்கும்
ஈழத்தமிழர்களுக்கு கண்ணீர்
சிந்தவல்ல...
மானம் இல்லாதிருக்கும்
அரசியல் முதலைகளின்
முகங்களில்
காரி உமிழ்வதற்காகவே..
--நிலாப்பெண்..

துயரம்..


தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,
தூங்க கூட முடியா துக்கம்,
துவண்டு போன தேகம்,
தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,
தொலைந்துப் போன பாதையிலும்
துரத்தி வரும் துன்பங்கள்..
திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,
தவிடுப்பொடியான தருணங்கள்,
தீர்வுக்கூட வேண்டாம்,
திருப்பம் கூட இல்லையே..
துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு
தடுமாறும் வேளைகள்
துயரம் மட்டுமே துணையென
தூணில் சாயவும் தெம்பின்றி
துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி
தனிமையில் தவிக்கும் எந்நிலை
தயவுசெய்து வரவேண்டாம் யாருக்கும் தரணியிலே!!!
--நிலாப்பெண்..

ஈழத்தில்................


பிஞ்சு பாதங்களும்
பிறக்கா மழலைகளும்
சிதறுத் தேங்காய்களாய்!
பள்ளிக் குழந்தைகளும்
பருவ மங்கைகளும்
கிழிந்த ஆடைகளாய்!
வயது வந்தவரும்
முதிர்ந்த வயதினரும்
உடைந்த பொம்மைகளாய்!
இளம் காளைகளும்
எண்ணற்ற சகோதர்களும்
சாய்ந்த மரங்களாய்!
இதையெல்லாம் அறிந்தும்
ஐ.பி.எல் ஆட்டத்தையும்
நமிதாவின் நடனத்தையும்
நகராது பார்க்கும்
பிணங்களாய் நாம்!!!!!!
--நிலாப்பெண்..

மரண வாசல்..


தூக்கத்தைத் தூக்கிலிடும்
கண்ணீர்த் துளிகள்
இடைவேளையின்றி
இமைகளின் இடையில்..
என் துக்கங்கள்
பல நேரங்களில்
தொண்டைக் குழிக்குள்
புதைக்கப் பட்டது..
வீறிட்டு அழத்
திராணியற்று
திணறுபவளாய்...
அழுபவர் கோழை
ஐந்து வயதில்
இருந்த ஞானம்,
தனிமை துணைக்கு
வந்தப் பின்
மறந்துப் போனது...
அழுது சிவந்த கண்களை
கண்ணாடியில் காண்கையில்
கள்ளிப்பால் கொடுக்காதவரை
பெரிதாக நொந்துக் கொண்டேன்..
ஒவ்வொரு இரவும்
நாளையாவது விடியும்
எனும் நப்பாசையும்
நலிந்து போனது..
இதய ரணங்களுக்கு
மருந்து போட
மனமில்லை...
மரணத்தின் வாசலில்
மறைந்து போகும்
எண்ணத்துடன்.....................
--நிலாப்பெண்..

முகம்..


நீ நூலகம்செல்கையில்

நானும் நூலகம்வருவது,

சத்தியமாய்

உன் முகம் படிக்க மட்டுமே..

--நிலாப்பெண்..

மழலையின் மருகும் குரல்..


கருவறைக்குள் இருக்கும் மழலையின் தகிக்கும் தவிப்புக் குரல் இங்கே.. இல்லை இல்லை ஈழத்திலே...


இருட்டுக்குள் இருக்கிறேன்..

ஆனாலும் இதமாக இருக்கிறேன்..

வெளிச்சத்தை பார்க்கும் முன்னேவ

ெடிச்சத்தம் கேட்கிறதே!!

கருவறைக்குள்ளேயே கருகிப்போவேனா,

வெளியுலகிற்கு வந்து வெந்துப்போவேனா?

பூவாத் தலையா போட்டு பாருங்களேன்!!

அப்பா நேற்றே இறந்துப்போனாராம்,

மயங்கி கிடக்கும் என் தாயே,

நீ விழித்தவுடன் நம்மை அழித்துவிடுவர் தானே?

ஆதலால் விழித்துக் கொள்ளாதே அம்மா..

உன் ஈரவிழிகளையும்

நம் ஈழவலிகளையும் பார்க்கவா,

ஈரைந்த்து மாதங்களாய் உனக்குள் இருக்கிறேன்??

இறந்து போகலாம் வா தாயே,

இந்திய இறையாண்மையும்

அதைத்தானே விரும்புகிறது!!!

--நிலாப்பெண்.

பொம்மை..


காதலிக்கும் போது அதிகமாய்

பொம்மைகளை தான் பரிசளித்தாய்..

அப்போது உணரவில்லை..

திருமணத்திற்கு பின்

உணர்ச்சியற்ற பொம்மையாக

என்னையும் நடத்துவாய் என!!

--நிலாப்பெண்..