Monday, August 30, 2010

வீரா!

வளைந்து குறுகினாலும்,
வீரத்தின் அடையாளம்.
உன் முறுக்கு மீசை!

மென்மை!

இருப்பக்க அரிவாள்
மென்மையாய் தீண்டுதே,
மீசைக்காரா!

--நிலாப்பெண் ..

வண்ணங்கள் விற்பனைக்கு..


நீலமும் சிவப்பும் ஒன்றாக,
வானமும் வட்டனும் அல்ல..
கருப்பும் வெள்ளையும் கட்டிக்கொண்டு,
ரஜினியும் ஸ்ரேயாவும் அல்ல..
மஞ்சளும் பச்சையும் பக்கத்திலேயே,
கட்சிக் கூட்டமும் அல்ல..
காவியும் சாம்பலும் பக்கத்திலேயே,
காஞ்சிபுர மடமும் அல்ல..


விதவை விற்கும் பாசிமணிகள்..
வெறும் பத்து ரூபாய்!

--நிலாப்பெண்..
==>வட்டன் -- சூரியனுக்கு நான் சூட்டிய செல்ல பெயர்..

கனவுக்குள்ளே..


நேற்று நீ கனவில்
வருவதாய் சொன்னாய்..
நானும் கண்விழித்து
காத்திருந்தேன்..
உன் நினைவுகளின்
ஊடே கனவுக்குள்ளும்
கள்ளத்தனமாய்
எப்படி புகுவாயென?
ஆனாலும் வந்து தான்
விட்டாய்..
தற்செயலாய்
கண் சிமிட்டுகையில்,
தொட்டில் கட்டி,
எனை தாலாட்ட...


--நிலாப்பெண்..

தூக்கமின்மை..

ஏனோ என் இரவுகள்,
இப்பொழுதெல்லாம்
முடிவதே இல்லை..
பொழுது புலர்ந்த பின்னும்
பெரிதாய் மாற்றம்
உணர்வதில்லை..
இயற்கை வரைந்து விட்ட
கண் மையாய்,
கருவளையம்
கவிழ்ந்து நிற்க...
கனவுகளின் ஊடே
வரும் தூக்கத்தை
துரத்திக் கொண்டு நான்..

காரணம்?
கரண்ட் இல்லா
கோடைக் காலம் மட்டுமல்ல,
தற்போது தேர்வுக்காலம் கூட

--நிலாப்பெண்..

காதலினால்..


உன் பெயரின் அர்த்தம் கேட்டேன்,
தெரியாது "புவி' என்றாய்..
என் பெயர் அர்த்தம் பெற்றது!!!

--நிலாப்பெண்@ புவி:)

அழகான வார்த்தைகள்..


உன்னை பற்றி
கவிதை எழுதுகையில்,
நான் திரும்ப திரும்ப
திருத்துவதே இல்லை..
வார்த்தைகள் எல்லாம்
இடம் தேடி அமர்கிறது
உன்னை பற்றிய
கவிதை என்றதும்!

--நிலாப்பெண்..

வாழ்கையாம் வாழ்க்கை!!!


வேதனை தலைத்தூக்கும் நேரம்,
தலைக்குனியும் தன்னம்பிக்கை..

சுடும் வார்த்தைகளின் முன்,
சுடுகாட்டில் சுயமரியாதை..

கண்ணீரின் வரவறிந்து,
சென்றுவிடும் சிரிப்பலை..

மரியாதை மிதிப்படுகையில்,
மறைந்துவிடும் மனிதநேயம்..

இழப்புகள் இறுதிவரை தொடர,
வரவுகள் மட்டும் வக்கனாய்..

வாழ்க்கையாம் வாழ்க்கை!
மனிதராம் மனிதர்!!

--நிலாப்பெண்..

மழைக் காதல்..


நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

--நிலாப்பெண்

Thursday, August 26, 2010

உணர்வின் உணர்வு!


மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண்..

கவிதையின் கதை..


நீ உயிருக்குள்
ஊடுருவியதால்,
உயிர் பெற்ற எழுத்துக்கள்
பிணைந்து நின்று,
கவிதைகளாக
வெறியாட்டம் போட்டன..

நீ பார்க்கும் வேளைகளில்,
பல்லிளித்து நின்றன..

நீ பேசிய ஒருசில
வார்த்தைகளை கேட்டு,
கோடி வார்த்தைகள்
முட்டிக் கொண்டன,
உன்பற்றிய கவிதைகளுக்குள்
எப்படியேனும் நுழைந்துவிட..

அழகான கவிதைகளென,
புன்னகைப் பூத்தாய்..
ஆரவாரமிட்டு கூச்சலிட்டன
உன்னால் பிறந்த,
கவிக் குழந்தைகள்..

மெள்ள நீ விலகிசெல்கையில்
வீரிட்டு அழுதன கைக்குழந்தையாய்..

முற்றிலுமாக விட்டுச்சென்றாய்,
மரணப்படுக்கையில்
மெளனித்தன கவிதைகள்!

--நிலாப்பெண்..