Friday, August 5, 2011
தேவதன் :)
உன்னை என்னவென சொல்வது?
சரி! வித்தியாசத்திற்கு
உனை பெற்ற அம்மா தேவதையாகட்டுமே!
தெரியும்..
எப்படித் தெரியுமா?
பிறகு எப்படி எப்போதும் எனக்கு நீயே தெரிகிறாய்?
--நிலாப்பெண்..
Wednesday, July 27, 2011
இலையுதிர் காலத்தில் அரும்பிய மலர்- காதல்!
காதலித்த பின் இருக்கும் ஒரே “வலி”, காதலை காதலிக்காமல் இருப்பது.
முதன் முறையாய் அவன் காதல் சொன்ன இடத்திற்கு எந்த இலக்கும் இல்லாமல் சென்றாள். அவர்கள் அமர்ந்த அந்த மரத்தின் கீழ் அமர்ந்தாள். இது இலையுதிர் காலம், மரத்திற்கு மட்டுமல்ல அவளுக்கும் தான்.
மரத்தில் சாய்ந்து கண் மூடினாள், கையற்ற மரம் அவளை அணைத்து ஆறுதல் கூறுவது போல் உணர்ந்தாள். கண் திறந்து பார்க்கையில், மூடிய கண்களுக்குள் நுழைந்திருந்த கண்ணீர் துளிகள் உதிர்ந்து விழுந்தன புற்களின் தலை மேல்.
அவன் காதலைச் சொன்னப்போது மறுத்த முதல் மூன்று நாட்கள் நினைவில் இன்று நிழலாடின, அப்படியே மறுத்திருந்தால், இன்று மறக்க முடியாமல் மருங்க மாட்டேனே என.
செல்லிடைப்பேசியை அவ்வப்போது பார்த்தாள், சிணுங்கி அழைக்காதோ என.
எத்தனை, செல்லம் கொஞ்சியுள்ளோம் இச்செல்லிடை வழியே. உயிருடன் இருந்தும் செத்து விட்டதோ செல்லிடை என சோதித்தாள், அவள் காதல் உயிர்ப் பெற வழியுண்டோ என.
அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை, அவள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தாள், எதுகை மோனையற்ற எம் காதல் கவிதைகள் என.
இன்று எல்லாம் ஒருசேர மெளனித்திருந்தன
காதல் செய்தால், வலி தான் என்று அவள் தோழி சொன்னது உண்மை என தோன்றியது.
மூன்று வருடக் காதல், முக்கால் மணி நேர சண்டையில் முற்றுப் பெற்றதா?
மூச்சு முட்டியது அவளுக்கு.
சின்ன சின்ன ஊடல்கள் எப்போதும் உண்டு அவர்களுக்குள். அதுவும் காதலின் அடையாளம் தானே. ஆனால் சில நாட்களாய், ஊடல் பெருத்து சாடல்களாகின.
“உன்னால் தான் எல்லாம்” என இருவரும் இருவரின் மேல் புகார் கொடுத்துக் கொண்டனர். இன்று சரியாகும், நாளை சரியாகும் என நம்பிய இருவரும் என்றுமே சரியாகாது, என முடிவெடுத்து முடித்தனர், அவர்களின் காதல் அத்தியாயத்தை.
சூரியன் மறைந்து வெண்ணிலா வெளி வரும் நேரம். அவளிடம் கண்ணீரேக் கெஞ்சியது நாளை வருகிறேனே என. எழ எத்தனித்தப்போது பெரிய கிளையொன்று மரத்தை பிரிந்து மண்ணைத் தொட்டது. சத்தம் கேட்டு திரும்பினாள், அவனும் திரும்பினான் மரத்தின் மறுப்பக்கத்தில் இருந்து.
இதழ்கள் விரிந்தன, வார்த்தைகள் மட்டும் பின்னிதழில் சிக்கிக் கொண்டன இருவருக்கும்.
இது தான் சமயம் என, கண்கள் பேசத்துவங்கின.
முடிந்த காதல் அத்தியாயத்தை, மரக்கிளையை அர்ப்பனித்து சேர்த்த மரம், இலையில்லாமல் இன்னும் அழகாய் தெரிந்தது!!!
Sunday, June 19, 2011
குருவிக்குஞ்சு
வாடகை கொடுக்காத
சிட்டுக்குருவிகள் கூடு கட்டியப் பின்
இன்னும் ஒரு சொந்தம் கூடியது
என் அறைக்குள்,
எனக்கும் :)
--நிலாப்பெண்..
Thursday, May 12, 2011
காதல் வலை
காதல் உலகில் காலடி வைக்கையில்,
காற்று காதில் மெதுவாய் வருட
குயில்கள் கூட்டம் கானம் பாட
மரம் அசைந்து பூக்கள் தூவ
நிலவு ஒளியை இன்னும் கூட்ட
மழைத்துளி மண்ணில் எங்கும் படர
முகம் முழுக்க பூரிப்புடன்
கண்கள் சிரிக்கக் கனவுக் கொண்டு
மழலையாக துள்ளி மகிழ்ந்து
காதல் கோட்டைக்குள் வேகமாய் நுழைந்து
ஓடியாடி சில தூரம் கடக்கையில்,
காற்று புயலாய் மாறி கர்ஜிக்க
கிளைகள் ஆடி குயில்கள் பறக்க
வெள்ளம் பாய்ந்து பாதை மறைக்க
இருளின் ராஜ்ஜியம் எங்கும் விரிய
கண்கள் மூடி வெளிச்சம் தேட
வலையில் சிக்கிய கால்கள் நடுங்க
உணர்ந்தேன் பலியான கனவுகளை
கேட்டேன் காதலின் அரக்கச் சிரிப்பை..
--நிலாப்பெண் “புவனா”
Saturday, February 5, 2011
பார்வை போதும்
வார்த்தைகளால்
அலங்கரிப்பதில்லை..
உன் பார்வை போதும்,
அழகான கவிதையாய்
உருமாறி நிற்கிறது......
--நிலாப்பெண்..
என்னவனாய்...
முகத்தை மூடும் கைகளாய்..
ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..
இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..
ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..
உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..
ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..
எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..
ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..
ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..
ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..
ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..
அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..
--நிலாப்பெண்..