உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...
--நிலாப்பெண்
அடிக்கடி முறைத்துப் பார்ப்பாய்
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை
நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள்
விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல்
அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.
ஏய்! திருட்டு பூனையே
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..
உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,
வலியென வீழ்ந்துவிடாதே!
விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு....
தனிமை சிறையில் அகப்பட்டு கொண்டால்
இருட்டுக்குள் அடங்கிவிடாதே!
பிறர் வாழ்க்கைக்கு ஒளியேற்ற ஓடு...
வாழ்க்கை பாதையில் தடங்கல்கள்
தடுத்தால்தடுமாறி தளராதே!
விண்ணை தொடுவது போல் எகிறி தாண்டு..
தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால் அடங்கி விடாதே!
நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..
விதியென மூலையில் மூளையில்லாதுமழுங்கி விடாதே!
மதிக் கொண்டு வெல்வதை உலகிற்கு இயம்பு..
கூனிக் குறுகி கேள்விக்குறியாய் வாழ்ந்துமாய்ந்து விடாதே!
நிமிர்ந்து நின்று ஆச்சரியக் குறியாக உயர்..
இருட்டுக்குள் இருக்கிறேன்..
ஆனாலும் இதமாக இருக்கிறேன்..
வெளிச்சத்தை பார்க்கும் முன்னேவ
ெடிச்சத்தம் கேட்கிறதே!!
கருவறைக்குள்ளேயே கருகிப்போவேனா,
வெளியுலகிற்கு வந்து வெந்துப்போவேனா?
பூவாத் தலையா போட்டு பாருங்களேன்!!
அப்பா நேற்றே இறந்துப்போனாராம்,
மயங்கி கிடக்கும் என் தாயே,
நீ விழித்தவுடன் நம்மை அழித்துவிடுவர் தானே?
ஆதலால் விழித்துக் கொள்ளாதே அம்மா..
உன் ஈரவிழிகளையும்
நம் ஈழவலிகளையும் பார்க்கவா,
ஈரைந்த்து மாதங்களாய் உனக்குள் இருக்கிறேன்??
இறந்து போகலாம் வா தாயே,
இந்திய இறையாண்மையும்
அதைத்தானே விரும்புகிறது!!!
உன் வீட்டு தினசரி பத்திரிக்கையை
நான் தான் கடத்துகிறேன்..
உன் முகத்தை என்னிடமிருந்து
மறைக்கும் எதற்கும் இந்நிலை தான்..
--நிலாப்பெண்..